அப்துல்கலாமுடன் கேள்வி-பதில்.......விகடன் வெளியீடு
எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?''
''நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, என் லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்!''
சிவராமசுப்பிரமணியன், தூத்துக்குடி-2.
''ஜனாதிபதி பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்கிறார்களே... உங்கள் கருத்து என்ன?''
''சட்டத்தை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் வகுத்தால், அதை அரசியல் சாசனப்படி நிறைவேற்றும் பொறுப்பு, இந்திய அரசியல் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு, அதை நிறைவேற்றும் கடமை ஜனாதிபதியிடம் உள்ளது. எப்பணியை நான் செய்ய வேண்டுமோ, அப்பணியை என்னால் செய்ய முடிந்தது. அதற்கு மேல் நான் ஜனாதிபதியாக இருந்தபோது, மக்களிடமும், சட்டமன்ற, நாடாளுமன்றத்திடமும் 'இந்தியா 2020’ என்ற திட்டத்தையும், நகர்ப்புற வசதிகளைக்கிராமப் புறங்களுக்கு எடுத்துச் செல்லும் 'புரா’ திட்டத் தையும், இளைஞர்களை எழுச்சியுறச் செய்து இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு தயார்ப்படுத்த முடிந்தது. அதன் பரிணாமத்தை இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்தியாவில் காண்கிறோம்!''
எஸ்.சையது முகமது, சென்னை-93.
''2020-ல் இந்தியா வல்லரசாக உருவா கும் என்று கூறியிருந்தீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்... அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறதா?''
''ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன். உலகமயமாக்கலில், வல்லரசு என்ற சித்தாந் தம் என்றோ போய்விட்டது. இந்தியா 2020 -க்குள் சமூக, பொருளாதாரத்தில், அமைதியில், பாதுகாப்பில், வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதுதான் நான் வலியுறுத்தும் கருத்து. 60 கோடி இளைய சமுதாயத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 'என்னால் முடியும்’ என்று அவர்கள் நினைப்பார்களேயானால், நம்மால் முடியும், இந்தியாவால் கண்டிப்பாக முடியும்! மன எழுச்சிகொண்ட இளைய சமுதாயம் இந்தியாவை வளர்ந்த நாடாக்கிக் காட்டும்!''
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
''நம்பிக்கைத் துரோகிகளை என்ன செய்யலாம்?''
''இது ஒரு நல்ல கேள்வி. என் பதில்... மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு. அது இரண்டு நல்ல மனிதர்களை உருவாக்கும்!''
கே.ஆதிகேசவன், மதுரை.
''சந்திராயன் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?''
''செப்டம்பர் 14, 2009-ம் தேதி சந்திராயன்-1 திட்டத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகளைப்பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் NASA, JPL, ISRO விஞ்ஞானிகளோடு, நானும் ISRO சேர்மன் மாதவன் நாயரும் கலந்துகொண்டோம். ISROவும், NASAவும் சேர்ந்து உருவாக்கிய M3 (மூன் மினராலஜி மேப்பர்) என்ற சென்சார் உபகரணம், எப்படி HO/H2O தண்ணீர்ப் படிமங்களைக் கண்டுபிடித்தது என்பதைப்பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை விவாதித்தோம். அப்போது NASA ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைச் சொன்னார். அதாவது, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது. இந்தியா - அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் M3 தண்ணீரைக் கண்டு அறிந்தது என்று அறிந்தபோது, இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்!''
சத்தியநாராயணன், சென்னை-38.
''தெரிந்தே செய்யப்படும் ஊழல் எது? தெரியாமல் செய்யப்படும் ஊழல் எது?''
''ஊழலில் வேறுபாடு கிடையாது. ஊழல் என்றால்... ஊழல்தான்!''
எஸ்.சையது முகமது, சென்னை-93.
''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது சுதந்திரமாக இருந்தீர்களா?''
''குடியரசுத் தலைவரின் சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை. அரசியல் சட்ட வரம்புக்குள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் யாரும் தலையிடவில்லை. கேபினெட் அங்கீகரித்த 'Office of Profit bill’ அரசியல் சட்டத்தின் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று நாடாளுமன்றத்துக்குத் திருப்பி அனுப்ப முடிந்ததே! அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும் என்று நான் கூறிய ஆலோசனைகள், மத்திய அரசால் ஏற்கப்பட்டன!''
இ.ராமஜெயம், ராணிப்பேட்டை.
''உலக அரங்கில் இந்திய ஜனாதிபதிக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லையே! அந்தப் பதவி இந்தியாவுக்குத் தேவைதானா?''
''ஜனாதிபதி பதவியை வகிப்பவரின் தொலைநோக்குப் பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், உயர்ந்த எண்ணமும், செயல்களும்தான், அந்த நாட்டுக்கும், அந்தப் பதவிக்கும் பெருமை சேர்க்கும். ஒவ்வொரு ஜனாதி பதியும், அவர்களின் தனிச் சிறப்பால் நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்!''
பொன்னி, கோவை.
''நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!''
''இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!''
சத்தியநாராயணன், சென்னை-38.
''உலக அரசியல் தலைவர்களில் தங்களைப் பிரமிக்கவைத்தவர் யார்?''
''தென் ஆப்பிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறுமை யால், மனோதிடத்தால், பதவிக்கு வந்து, தென் ஆப்பிரிக்காவில் அடிமை நிலைக்குக் காரண மானவர்களை மன்னித்து, அவர்களையும் அந்த நாட்டுக் குடிமக்களாக அங்கீகரித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களும்தான் என்னைப் பிரமிக்க வைத்த உலக அரசியல் தலைவர்கள்!''
ஆர்.சுரேஷ், துறையூர்-10.
''சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''
''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!''
ச.கோபிநாத், சேலம்.
''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''
''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக